திமுக பிரமுகர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது
மயிலாடுதுறையில் திமுக பிரமுகர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை விட மோசமான சம்பவம் நடக்கும் உனக்கு நாள் குறித்து ஆயிற்று என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பூர்வீகமாக கொண்டவர் அகமதுஷா வலியுல்லாஹ். வெளிநாட்டில் தொழிலதிபராக உள்ள இவர் மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை செயலாளராக உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட்டு கேட்டிருந்தார். குறுகிய காலத்தில் அக்கட்சியில் முக்கியமானவராக வலம் வந்தார் இது உள்ளூர் திமுகவினர் இடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்தில் மூன்று முறை கொலை மிரட்டல் விடுத்து Whatsapp மூலம் வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது. கடைசியாக வந்த மெசேஜில் உனது அலுவலகத்தில் 17ஆம் தேதி பெட்ரோல் குண்டு வெடிக்கப் போவதாகவும் அதற்குப் பிறகும் ஏரியாவில் அரசியல் செய்ய வந்தால் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமான சம்பவம் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து அகமதுஷா வலியுல்லாஹ் தரப்பினர் மயிலாடுதுறை போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது அலுவலகத்திற்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்து இருந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னையில் வேலை பார்த்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் சாய் பிரவீன் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்க சொல்லி புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு நபர் பணம் கொடுத்து பேச சொல்லியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சில குற்றவாளிகள் இருப்பதாகவும் அவர்கள் பிடிப்பட்ட பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.