கூல்ட்ரிங்ஸ் கடையில் சிகரெட் கேட்டு மது போதையில் கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது.கத்தியுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்களம் செட்டி தெரு பகுதியை சேர்ந்த தேவா வயது 45 என்பவர் அச்சுதமங்களம் கடைத் தெருவில் கடந்த 8 வருடங்களாக கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று கடையை திறந்து அவர் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோபி வயது 23 அஜய் வயது 24 ஆகியோர் மது போதையில் குளிர் பான கடைக்கு வந்துள்ளனர்.
மேலும் அங்கு வந்த அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஹான்ஸ் மற்றும் சிக்ரட் வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இந்த பொருட்கள் எல்லாம் இங்கே விற்பனை செய்வதில்லை என கடை உரிமையாளர் தேவா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் இதெல்லாம் இல்லனு சொல்ற நீ எதற்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாய் என தரக்குறைவாக பேசி குளிர் பான பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோபி என்கிற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடை உரிமையாளரின் மனைவி உதயா என்பவரை தக்க முயற்சி செய்துள்ளார்.அப்போது அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் தேவா அளித்த புகாரின் அடிப்படையில் கோபி மற்றும் அஜய் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கத்தியுடன் இளைஞர்கள் குளிர்பான கடையில் ரகளையில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.