சிதம்பரத்தில் தேரோடும் வீதிகளில் உறியடி திருவிழா
சிதம்பரம். கோகுலாஷ்டமியை முன்னிட்டு யாதவர் அமைப்புகள் சார்பில் சிதம்பரம் தேரோடும் வீதிகளில் உறியடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோகுலாஷ்டமியின் போது உறியடி விழா இரு கம்பங்கள் நடப்பட்டு, மேலே பால், வெண்ணை, நெய், தயிர் பானைகள் தொங்கவிடப்படும். இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி குச்சியால் பானைகளை அடிக்க வேண்டும்.
ஒரு நீண்ட குச்சியை வைத்து மரம் ஏறி அதைச் செய்ய முயலும் போது நான்கு புறங்களில் இருந்தும் தண்ணீரை வாரி இறைப் பார்கள். மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள்.
மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு, துளசி மாலையை சூட்டிக்கொண்டு, இளைஞர்கள் குச்சியால் உறியடித்து உற்சாகமாக கோகுலாஷ்டமியை கொண்டாடுவது பெரியாழ்வார் காலத்திலிருந்து தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிதம்பரத்தில் யாதவர் அமைப்புகள் சார்பில் மேலவீதி -காசுக்கடைத்தெரு சந்திப்பு, மேலவீதி கஞ்சித்தொட்டி முனை, தெற்குரதவீதியில் இரு இடங்களில், வடக்குவீதி-கீழவீதி சந்திப்பு ஆகிய இடங்களில் தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயில் சித்திரக்கூடத்தான் முன்னிலையில் உறியடி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இளைஞர்கள் பங்கேற்று குச்சியால் உறியடித்து கொண்டாடினர். திரளான பக்தர்கள் பங்கேற்று இதனை கண்டு தரிசித்தனர்.