ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம்
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து முதல் நாள் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி இன்று பகல் முழுவதும் பக்தர்களுக்கு காட்சி…ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம்….
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று தொடங்கியது. பகல் பத்து முதல் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு திருஆபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் வரும் ஜனவரி 09- ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். அதன் பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான வரும் ஜனவரி 10-ம் தேதி அதிகாலை 5.15- மணிக்கு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார். அதனை தொடர்ந்து வரும் ஜனவரி 16ஆம் தேதி கைத்தல சேவையும், ஜனவரி மாதம் 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடைபெறும்.
அப்போது நம்பெருமாள் தங்க குதிரையில் வலம் வருவார். வரும் ஜனவரி மாதம் 19ம் தேதி தீர்த்தவாரி நம்பெருமாள் கண்டருளுவார். ஜனவரி மாதம் 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுறும். 21 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தின் போது மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பெருமாளுக்கு முத்தங்கியுடன் சேவை சாதித்தருளுவார்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஸ்ரீரங்கத்திற்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா காரணமாக ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.