in , , , ,

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி – நம்பெருமாள் தங்ககுதிரையில் வேடுபறி உற்சவம் நடைபெற்றது

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து 8ம்திருநாள் – நம்பெருமாள் தங்ககுதிரையில் வேடுபறி உற்சவம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த டிசம்பர் 30ம் தேதி, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 31ம் தேதி முதல், 09ம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடைபெற்றது. பகல்பத்து உற்சவம் நிறைவு நாளன்று, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார். 10ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது.

ராப்பத்து 8ம் திருநாளான (17.01.2025) மணல்வெளியில், திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து திருநாளில் எட்டாம் திருநாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்தது. இதையொட்டி நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள மணல்வெளிப் பகுதியில் நம்பெருமாள் வையாளி நடந்தது.

இதையடுத்து ஆன்மீகம் மற்றும் அறப்பணிகளுக்காக கொள்ளையில் ஈடுபட்டுவரும் திருமங்கை மன்னனை திருத்தி ஆட்கொண்டருளும் பொருட்டு, நம்பெருமாளின் நகைகள் மற்றும் தங்க வெள்ளி பாத்திரங்களை திருமங்கை மன்னன் அவரைச் சேர்ந்தோர் கொள்ளையடித்துச் செல்லும் காட்சி அரங்கேறியது. இறைவனிடமே கொள்ளையடித்ததை உணர்ந்து திருமங்கைமன்னன் நம்பெருமாளிடம் சரணாகதி அடையும் வைபவமும் நடந்தது.

இதைத் தொடர்ந்து நம்பெருமாள் மன்னனை மன்னித்து ஆழ்வார்களில் ஒருவராக திருமங்கையாழ்வாராக ஏற்றுக் கொண்டார் என்பது ஐதீகம்.
இந்த உற்சவ நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

என் கதை இல்லை… மகிழ்திருமேனி open talk

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து 10ம் திருநாள் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.