அரசு மருத்துவமனையில் லஞ்சம் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெரும் பல்நோக்கு பணியாளரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அருகே உள்ள இராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு உள்ளிட்ட தாலுகாவில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கான சிகிச்சை,பல் மருத்துவ சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, பொது மருத்துவம், மற்றும் எக்ஸ்ரே வசதிகள் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற கூடிய விருதுநகரை சேர்ந்த பல்நோக்கு பணியாளர் மாரிக்கனி என்பவர் பிரசவத்திற்கு வந்திருக்கும் உறவினர்களிடம் 100 ரூபாய் லஞ்சம் பெரும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அங்கு இருக்கும் நோயாளிகளின் உறவினர்களிடம் கேட்டபோது அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் நோயாளிகளை திட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழைகள், முதியவர்கள், கூலி தொழிலாளிகள் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வழியில் இல்லாமல் அரசு மருத்துவமனையை நாடிவரும் நிலையில் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து லஞ்சம் கேட்கும் பணியாளர்கள் யார் யார் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.