இறப்பதற்கு அனுமதி கேட்டு நாகை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
நான்கு வருடங்களாக சாலை அமைக்காததால் ஆத்திரம் இறப்பதற்கு அனுமதி கேட்டு நாகை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்ததால் பரபரப்பு
நாகை மாவட்டம் கருங்கண்ணி வடக்கு தெருவில் அருள்மேரி, பிரிமிலா, ராபர்ட், மிஸ்டிக்கா, மிஸ்பாமேக்தலின், விமலா, உள்ளிட்ட 5 குடும்பத்தினர் வசித்து. வருகின்றனர்.
நான்காவது வார்டில் அமைந்துள்ள இந்த பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கோரியும், சாலை வசதி ஏற்படுத்தி தராமல் பாதையை துண்டித்து தங்களை மிரட்டிவரும் அதே பகுதியை சேர்ந்த சந்தனராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதாகவும், மூன்று ஆட்சியர்கள் மாறியும் பலனில்லை எனவும் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகஷ்சை நேரில் சந்தித்து இறப்பதற்கு அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட எந்தவித அரசு சேவைகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் எங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளனர்.