தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
தாய்பாலின் முக்கியத்துவம், தனித்தன்மை குறித்து தாய்மார்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல்-7வரை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி இந்திய குழந்தை மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால்வாரவிழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது.
தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி அண்ணல்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் “இடைவெளியை குறைப்போம் – தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்கப்படுத்துவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, தாய்ப்பாலை கொடுப்போம் தலைமுறையைக் காப்போம் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்போம் மற்றும் தாப்பாலின் அவசியம் குறித்த உறுதிமொழியினையும் மருத்துவர்கள், செவிலியர்கள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கத்தினர், தாய்மார்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு, தாய் நலம் புட்டிப்பாலின் கேடுகள் உள்ளிட்டவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும்வகையில் செவிலியர்கள், மருத்துவர்கள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரசு மருத்துவமனையிலிருந்து பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக இப்பேரணியினை குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவர் சுரேஷ்குமார் தலைமையில், அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் அர்ஷியாபேகம் தொடங்கிவைத்து பேரணியில் பங்கேற்றுச் சென்றார்.