கொடுமுடியாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டாரத்தில் 2549 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.
இன்று நெடுந்தீவு அருகே நாட்டு படகு மீனவர்களை இலங்கை அரசு அத்துமீறி கைது செய்துள்ளது, மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடு கடந்த 10 ஆண்டுகளில் இருந்த கண்டு கொள்ளாத நிலையே 11- வது ஆண்டும் தொடர்கிறது, மீனவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 52.25 அடி கொள்ளவு கொண்ட கொடுமுடியாறு அணை உள்ளது. தற்போது நீர் இருப்பு 51 அடி உள்ளது. இந்த அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார் . இதனை அடுத்து இன்று 1- ந்தே ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். முதல்வர் உத்தரவுப்படி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள வள்ளியூரான் கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் 2549 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் இன்று 01-07-24 முதல் 28-10-2024 வரை 120 நாட்களுக்கு 50 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்.
மேலும் மழை தொடர்ந்து அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தால் வடமலையான் கல்வாயிலும் 100 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்படும் இஎன் மூலம் 3231 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் 4 நாட்டு படகில் சென்ற பாம்பனை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இதுவரை விசைப்படகு மீனவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் இன்று முதல் முறையாக நாட்டு படகு மீனவர்களுக் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இலங்கை அரசு தொடர்ந்து நமது மீனவர்களை தொந்தரவு செய்து வருகிறது மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமரிடமும் வெளியுறவுத்துறை அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ஆனால் ஒன்றிய பாஜக அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையில் கடந்த 10 ஆண்டுகளாக எப்படி கண்டு கொள்ளாமல் இருந்ததோ அதேபோல் தற்போது பதினோராவது ஆண்டாகவும் அதே நிலை நீடிக்கிறது ஒன்றிய அரசு மீனவர்கள், வெளியுறவுத்துறை, தமிழக அரசு, நீர்வளம், மீன்வளத்துறை இலங்கை அரசின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும், முன்பு மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் படகுகள் விடுவிக்கப்பட்டது, தற்போது படகுகளும் விடுவிக்கப்படாத்தால் பல லட்சம் மதிப்புள்ள படகுகள் சேதமடைகிறது, எனவே ஒன்றிய அரசு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், களக்காடு நகராட்சி துணை தலைவர் பி.சி.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக் ஒன்றிய செயராளர் ஜோசப்பெல்சி, மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.