வீரமணி மேடை ஏறி அவரது சித்தாந்தத்தில் இருக்கக்கூடிய திமுக 33 மாதங்களாக தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். தேர்தல் அறிக்கை குறித்து, ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கரூரில் அண்ணாமலை பேட்டி.
கரூர் – கோவை சாலையில் உள்ள தனியார் இடத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிமனை துவக்க விழா பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து வேட்பாளருக்கு நெற்றி திலகமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,கரூர் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வேலை செய்யக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் கிடைக்கவில்லை. மாவட்ட அமைச்சர் (செந்தில்பாலாஜி) சிறையில் உள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவ்வப்போது வேடந்தாங்கல் பறவை போல் வந்து செல்கிறார். உங்களுக்காக உழைக்கக்கூடிய நபரை எம்.பி ஆக்க வேண்டும். அதற்காகதான் பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோர் செந்தில் நாதனை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 295ம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 511ல் 20 கூட நிறைவேற்றவில்லை. 99% வாக்குறுதி நிறைவேற்றியதாக கூறும் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதிமுக வெற்றி பெற்றால் பிரதமரை வலியுறுத்துவோம் என்று கூறுகிறார்கள்.
400 எம்.பிக்களுடன் வெற்றி பெற்று பிரதமர் மீண்டும் ஆட்சி அமைப்பார். அதில் செந்தில்நாதனும் இருப்பார். செந்தில்நாதன் வெற்றி பெற்றால், தொகுதியை விட்டு வெளியே எங்கும் செல்ல மாட்டார். கரூரில் மூன்று சட்டமன்ற தொகுதிகள் வறட்சி மிகுந்த பகுதியாக உள்ளது. யோசித்து, ஆராய்ந்துதான் செந்தில் நாதனை வேட்பாளராக அறிவித்துள்ளோம். கரூர் தொகுதி மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் செந்தில்நாதன் வெற்றி பெறுவார்.
வீரமணி மேடை ஏறி அவரது சித்தாந்தத்தில் இருக்கக்கூடிய திமுக 33 மாதங்களாக தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். மத்திய அரசை பற்றி பொய் பரப்புவதை தவிர, வேறு எதுவும் செய்யவில்லை.
தமிழகத்திற்கு மே 9ஆம் தேதி வரை பிரதமர் மோடி வரக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், நிச்சயமாக தேர்தல் பரப்புரைக்கு அவர் வருவார். தேர்தல் பரப்பரைக்காக கரூருக்கு மோடி மற்றும் அமித்ஷாவை அழைத்து வரவேண்டும் என்றும், கிராமப் பகுதி மக்களிடம் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் எங்களுக்கு உள்ளது என்றார்.