தமிழக வெற்றி கழக கட்சியின் எந்த முடிவாக இருந்தாலும் கட்சியின் தலைவர் தான் எடுப்பார் என கடலூரில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி அஞ்சலை அம்மாளின் சிலைக்கு மாலை அணிவித்த பின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சி ராணி என அழைக்கப்பட்ட கடலூரில் பிறந்த அஞ்சலையம்மாளின் 134 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகின்றது.
கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர்,சமூக அமைப்பினர் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள்,பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோருடன் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் உத்தரவின் படி சிலைக்கு மாலை அணிவித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், கட்சியின் எந்த முடிவாக இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பார் என தெரிவித்தார்