யார் இந்த ஆர்.எம். வீ?
முன்னாள் அமைச்சரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர் எம் வீரப்பன் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.வயது 98. எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த இவர் அதன் பிறகு ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சராக இருந்தவர். கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் உடனும் நட்பில் இருந்தவர். சத்யா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி எம்ஜிஆர் நடித்த ஏராளமான படங்கள் மற்றும் ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
எம்ஜிஆரின் வலது கரமாக விளங்கிய ஆர் எம் வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தெய்வத் தாய், நான் ஆணையிட்டால், காவல்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் கதை, வசனகர்த்தாவாகவும் விளங்கியவர். ரஜினிகாந்த் மூன்று முகம், ஊர் காவலன், பணக்காரன், பாட்ஷா, கமல் நடித்த காக்கிச்சட்டை, காதல் பரிசு உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக பரத் படித்த எம் மகன் படத்தைத் தயாரித்திருந்தார்.
பெரியார் மற்றும் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவரான ஆர்எம் வீரப்பன் எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். மூன்று முறை சட்ட மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் ஆர்.எம். வீரப்பன்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் 5 முறை தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்துவந்தபோது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதிமுகவைத் தொடங்குவதில் எம்ஜிஆருக்கு உதவியாக இருந்தார்.
தமிழக அரசியலில் முன்னணியிலிருந்த அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடனும் மிக நெருக்கமாக இருந்தவர் ஆர் எம் வீரப்பன். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து இவரது உடல் தி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. இன்று (ஏப்.10) இறுதிச் சடங்கு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.