தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரிகளிடம் பணத்தை பறித்து கொண்டு வியாபாரிகளை அச்சுறுத்துவதால் ஏன் தேர்தல் வருகிறது என்ற அச்சம் வணிகர்களுக்கு உள்ளதாக விக்கிரமராஜா வேதனை…
மத்திய அரசால் வியாபாரிகள் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வருகிறார்கள்….விக்கிரமராஜா குற்றச்சாட்டு….
திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கத்தின் 38வது ஆண்டு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்துகொண்டு வணிகர் சங்க பேரணியை தொடங்கி வைத்தார்.
வருகிற மே மாதம் மதுரையில் 41வது வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாடு விடுதலை முழக்க மாநாடாக நடைபெறும் என தெரிவித்தவர், இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரம் வியாபாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தலால் வியாபாரிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும், தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வியாபாரிகளுக்கு வழங்கினாலும் அதிகாரிகள் வியாபாரிகளை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார்.
வியாபாரகளுக்கு லைசன்ஸ் வழங்குவதில் தமிழக முதல்வர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாநாட்டில் கூறியது போல் உடனுக்குடன் காலதாமதம் இன்றியும் நிர்பந்தம் செய்யாமலும் வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கினால் தான் வியாபாரிகள் விடுதலை பெற முடியும் என தெரிவித்தார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி யில் குறிப்பிட்ட தகுந்த மாற்றங்கள் செய்தால் மட்டுமே வியாபாரம் நிலைக்கும் என மன வருத்தத்தோடு தெரிவித்தார்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வியாபாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது, சிறைக்கு அனுப்புவது போன்ற செயல்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் இதில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே வியாபாரிகள் விடிவு காலம் பிறக்கும் என தெரிவித்தார்.
தேர்தல் பறக்கும் படையினர் அரசியல்வாதிகள் கொண்டு செல்லும் பணத்தை கண்டுகொள்ளாமல் வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை பிடிப்பது வியாபாரிகள் கடை வாசலில் பிடிப்பது போன்ற செயல்களால் வியாபாரிகள் மிகவும் அவதிப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு முறையான ஆவணம் காட்டியும் பணம் கொடுக்காமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக தெரிவித்த அவர் தேர்தல் பறக்கும் படையினர் இதுபோன்ற நெருக்கடியால் ஏன் தேர்தல் வருகிறது தேர்தலே வேண்டாம் என்ற நோக்கத்தில் வியாபாரிகள் உள்ளதாக வேதனையோடு தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகள் பணம் எங்கு உள்ளது என்பது நன்றாகவே தெரியும் வியாபாரிகள் பொருளை விற்பவர்கள் மட்டுமே அவர்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்றும் இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரை இரண்டு தினங்களுக்குள் நேரில் சந்தித்து புகார் அளித்து அங்கேயே போராட்டத்தை அறிவிப்பேன் என எச்சரித்தார்.
மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சி மத்தியில் உள்ள ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆகிய கட்சிகள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்த விபரங்களை பெற்றுள்ளதாகவும் எந்த கட்சி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு கடிதம் தருகிறார்களோ அவர்களுக்கு வியாபாரிகள் சங்கம் தங்களது ஆதரவை தெரிவிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மத்திய அரசால் வியாபாரிகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும் அவை கலையப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பிளாஸ்டிக் தொடர்பாக அதிகாரிகள் கார்பரேட் கம்பெனியை விட்டு விட்டு சிறு தொழில் செய்யும் வியாபாரிகளை நசுக்குவதாக குற்றம் சாட்டினார்.