எதற்கு இத்தனை மெத்தனமோ ?? தேர்தல் விதி மீறலால் சர்ச்சை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று மாலை 3 மணி அளவில் அறிவிப்பு வெளியிட்டது.
அதனை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன ஆனால் தற்போது வரை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உள்ளடக்கிய சேத்துப்பட்டு, தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படாமல் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை, வந்தவாசி சாலை அருகே உள்ள முன்னாள் முதல்வர் காமராஜரின் சிலை உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகள் இன்னும் மறைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.
அதேபோல் சேத்துப்பட்டு பேரூராட்சி பகுதி முழுவதும் தமிழக முதல்வரின் விளம்பர சுவரொட்டிகள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் அப்புறப்படுத்தாமல் அப்படியே உள்ளது.
மேலும் தேவிகாபுரம் பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள், விளம்பரங்கள், பதாகைகள், சுவர் விளம்பரங்கள் போன்றவற்றை அகற்றாமல் உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அதை பின்பற்றாத சேத்துப்பட்டு வட்டாட்சியர் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளின் மெத்தனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரான திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.