சவுதிக்கு மீன் பிடி தொழில் வேலைக்கு சென்ற தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மனைவி நாகை ஆட்சியரிடம் மனு
சவுதிக்கு மீன் பிடி தொழில் வேலைக்கு சென்ற தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மனைவி நாகை ஆட்சியரிடம் மனு; ஒரு ஆண்டுக்கும் மேலாக ஊதியம் வழங்காமல் அறையில் அடைத்து வைத்து கொத்தடிமையாக வைத்து இருப்பதாக மனைவி கண்ணீர் பேட்டி
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான்பேட்டை அமிர்தா நகர் பகுதியைச் சேர்ந்த அஞ்சப்பன் பிச்சைக்காரன், விஜயகுமார், செந்தில்குமார், தம்பிராஜ் ஆகிய 4 மீனவர்கள் சவுதியில் உள்ள மனீபா மீன்பிடி துறைமுகத்திற்கு யூனிப் கலீல் என்பவரது மூலமாக வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 12.12.2023 அன்று அஞ்சப்பன் பிச்சைக்காரன் என்பவர் வேலை பார்க்கும் போது உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு சம்பந்தமாக கூட வேலை பார்த்த விஜயகுமார் , உயிரிழந்த அஞ்சப்பன் பிச்சைகாரன் மகன் செந்தில்குமார், தம்பிராஜ் ஆகிய மூவரையும் khafji போலிஸ் khafji நீதிமன்றத்திற்கு விட்னஸ் ஸ்டேட்மெண்ட்க்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு விசாரணைக்கு பிறகு அஞ்சப்பன் பிச்சைக்காரன் மீன் பிடித் தொழில் பார்த்த போது இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து விசாரணைக்கு பின் விஜயகுமார், செந்தில்குமார், தம்பிராஜ் ஆகிய மூவரையும் தம்மன் என்ற இடத்தில் தற்காலிகமாக வேலை பார்க்க அனுமதி அளித்தும் இந்திய தூதரகம் மூலமாக இந்தியா அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதுநாள் வரை அவர்களை இந்தியா அனுப்புவதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தற்போது வேலை பார்க்கும் இடத்தில் கொத்தடிமை போல் அறையில் அடைத்து வைத்தும், ஊதியம் வழங்காமல் வேலை வாங்கி வருவதால் உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விஜயகுமார் மனைவி மற்றும் உறவினர்கள் சவுதியில் தவித்து வரும் கணவர் உள்பட மூவரையும் மீட்டுத் தரக்கோரி இன்று நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி கூறும் போது சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம் இரண்டு பெண் பிள்ளைகளோடு தான் தவித்து வருவதாகவும், உடனடியாக இந்திய தூதரகம் மூலம் தனது கனவர் உள்பட மூவரையும் மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தார்.