அரசுடமையாகும் நியோமேக்ஸ் சொத்துகள் ஐயோ பாவம் முதலீட்டாளர்கள்
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆணைக்குழு அமைத்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, நியோமேக்ஸ் சொத்துக்களை அரசுடமையாக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை நியோமேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவன இயக்குனர் கமலக்கண்ணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். கமலக் கண்ணன் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி விருதுநகரைச் சேர்ந்த ரவி சங்கர், ராஜ் குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பாகெர்லா கல்யாண், நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
கூடுதல் அரசு வழக்கறிஞர் நம்பிச் செல்வன் வாதிடுகையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கில் இதுவரை அசையா சொத்துக்களின் 9,428 பத்திரங்கள் 99 பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நியோமேக்ஸ் நிறுவனத்தின் 752 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவற்றிலிருந்த ரூ.15 கோடி முடக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி, நியோமேக்ஸ் மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றமான டான்பிட் நீதிமன்றம் 10 வழக்கறிஞர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் ஆணையக் குழுவை நியமனம் செய்துள்ளது. இவ்வாறு வழக்கறிஞர் ஆணையக் குழு நியமிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? இதனால் வழக்கறிஞர்கள் ஆணைக்குழு அமைத்து டான்பிட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
நியோமேக்ஸ் சொத்துக்களை அரசுடமையாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும். தவறினால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும். விசாரணை மார்ச் 14-க்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.