குடிசை வீட்டில் வாழ்ந்தாலும், நண்பர்கள் உறவினர்களிடம் வசூல் செய்து 2 டன் அரிசி உள்ளிட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்த இளைஞர்கள் பொதுமக்கள் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி மோகன். சாலையில் ஆதரவற்று திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தூய்மைப்படுத்தி, உடை உடுத்தி, சமூக வலைதளங்கள் மூலம் உறவினர்களிடம் சேர்க்கும் பணியை செய்து வருகிறார்.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு பாரதி மோகன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன், 2 டன் அரிசி மளிகை பொருட்கள் உடைகள் போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 400 குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் சேகரித்துள்ளார். இந்தப் பொருட்களை மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் சார்பாக வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக பெரம்பூர் கடைவீதியில் நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இளைஞர்களின் செய்கை பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.