அசாமில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு இந்தியா கூட்டணியில் விரிசல்
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், அஸ்ஸôமில் 3 தொகுதிகளுக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸôமில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) சந்தீப் பதக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, “இந்தியா’ கூட்டணி தலைவர்களுடன் மாதக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால் இதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாததால் சலித்துப் போய்விட்டது. நாங்களும் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். அந்த வகையில் அஸ்ஸôமில் திப்ரூகர் பகுதியில் மனோஜ் தனோகர், குவாஹாட்டியில் பாபென் செüதரி, சோனித்பூரில் ரிஷி ராஜ் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுவர்.
அதே சமயத்தில், “இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கிறது. மேற்கண்ட 3 தொகுதிகளும் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்படும் என நம்புகிறோம். மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதை முன்னிட்டு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக ஏராளமான பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் நெருங்குவதால் அதற்கான நேரமும் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு ஆம் ஆத்மி கட்சி கடுமையாக உழைக்கும். முதிர்ச்சியுள்ள, உணர்வுபூர்வமான “இந்தியா’ கூட்டணியில் நாங்கள் அங்கம் இருக்கிறோம். ஆகையால், எங்கள் முடிவை அந்தக் கூட்டணி ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். தேர்தலில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். அந்த வகையில், அஸ்ஸôமில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்குகிறோம்.
“இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும். மோடி அரசை எதிர்த்து “இந்தியா’ கூட்டணியுடன் இணைந்து உறுதியுடன் போராடுகிறோம் என்றார் அவர்.
முன்னதாக மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் பரூச் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சைதர் வசவா போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.