ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி காலமானார்
மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 3வது முறை எம்பியாக இருந்து வந்த நிலையில், ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி சிட்டிங் எம்பியாக இருந்து வந்தார்.
இந்த சூழலில் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 24ம் தேதி திடீரென கணேசமூர்த்தி எம்பி தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.
கணேச மூர்த்தியின் இந்த செயல் மதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த சில நாட்களாக கணேச மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையே ஈரோடு எம்பி கணேச மூர்த்தியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடல்நல குறைவால் சிகிச்சைபெற்று வந்த கணேசமூர்த்தி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மதிமுக எம்.பி. கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 5 மணியளவில் சொந்த ஊரான குமாரவலசு பகுதியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மதிமுக எம்பி கணேசமூர்த்தி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 1947-ல் குமாரவலசு பகுதியில் பிறந்தவர். கடந்த 1978 – திமுக மாணவரணி பொறுப்பாளர் பதவி வகித்தி அவர், 1989ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 1993 ல் திமுக ஈரோடு மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்தார்.
இதன்பின் 1993ல் வைகோவுடன் மதிமுகவில் இணைந்த அவர், 1998ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து 2009, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.