உணவில் அரணை கிடந்த விவகாரம் சிதம்பரம் பள்ளியில் நடந்தது என்ன?
சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். 92 மாணவ மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை. அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் மருத்துவமனை எதிரில் திடீர் சாலை மறியல் போராட்டம். பெற்றோர்களுக்கு சரியான தகவல் அளிக்கவில்லை என பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு. அதிகாரிகள் விசாரணை
சிதம்பரம் அருகே உள்ளது சாக்காங்குடி கிராமம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில் மதிய உணவு சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த மதிய உணவை சாப்பிட்ட சில மாணவர்கள், உணவில் அரணை கிடந்ததாக தெரிவித்துள்ளனர் இதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவ மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
42 மாணவ, மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபோல் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், புவனகிரி தாலுக்கா அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இந்த 3 மருத்துவமனைகளிலும் சேர்த்து மொத்தம் 92 மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அதிக அளவில் சிகிச்சை பெறும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்த பெற்றோர்கள், மருத்துவமனை எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களுக்கு உரிய தகவலை தராதது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணாமலைநகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். 92 மாணவ, மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலையில், அவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர்கள்,
சாக்காங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சாப்பிட்ட உணவில் அரணை விழுந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை கூட பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி உள்ளது. பின்னர் பெற்றோர்கள் தலையிட்ட பிறகே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக குற்றம் சாட்டியவர்கள்,
வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் துறை ரீதியான உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். மேலும் தற்போது உணவு சமைக்கப்படும் கொட்டகை சேதமடைந்து இருப்பதால் அந்த கொட்டகையில் உணவு சமைக்க கூடாது என பலமுறை வலியுறுத்தியும் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.