தாமரையால் உடலுக்கு, நீர்நிலைகளுக்கு, நாட்டுக்குக் கேடு:- மயிலாடுதுறையில் நடைபெற்ற 3 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை விமர்சனம்:- திமுகவைவிட அதிக இடங்களை ஒதுக்கினாலும் கூட அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என பேட்டி
மயிலாடுதுறையில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
இப்போது அவர் கூறுகையில் பாஜக என்கிற பாசிச சக்தி ஒன்பதரை ஆண்டுகளாக இந்த நாட்டை அழித்து வருகிறது. படர்தாமரை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவுக்கும். ஆகாயத்தாமரை நீர்நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கும். பாஜகவின் தாமரை மலர்ந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அவ்வளவு ஏன் தருமபுரம் ஆதீனத்துக்கே பாதிப்பு ஏற்படும். தருமபுரம் ஆதீனம் காலம்காலமாக தமிழ் வளர்க்கும் ஆதீனத்தையே மிரட்டி கொடுங்கோலனாக செயல்பட்டுள்ளது பாஜக. வணிகர்களை மிரட்டி தேர்தல் நன்கொடை பத்திரம் பெற்று அந்த பணத்தை கொண்டு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது பாஜக. சீனா உள்ளிட்ட அந்நிய சக்திகளிடம் கூட பாஜக நிதி பெற்றுள்ளது என மக்கள் பேசுகின்றனர். இந்த நிதியை தேர்தலுக்குப் பிறகு திருப்பி தருவதாக சொல்கிறார் மோடி தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி எங்கே இருக்கப் போகிறது என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பாஜக நோட்டா வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பெறும். தேர்தல் நன்கொடை பத்திரங்களை இன்று வெளியிட்டு இருந்தால் உண்மை தெரிய வந்திருக்கும். தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வர் காங்கிரஸ் கட்சிக்கும் மனசாட்சிப்படி உரிய தொகுதிகளை வழங்குவார். 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். எனவே, திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும்கூட அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.37,000 கோடி நிவாரண உதவி கேட்ட நிலையில் பாரத பிரதமர் ஒரு பைசாகூட நிதி ஒதுக்கவில்லை. அவர் எந்த முகத்துடன் தேர்தலில் மக்களை சந்திப்பார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டியுள்ள பிரதமர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் யாரையும் அழைக்காமல் அடிக்கல் நாட்டியுள்ளனர். ராமரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற மோடியின் எண்ணம் நிறைவேறாது என்றார்.