தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது
நெல்லை பாளையங்கோட்டையில் இருந்து சிவந்திப்பட்டி செல்லும் சாலையில் தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. 26.30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தினை இன்று தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு கடந்த எட்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த பால பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பாக நிறைவு பெற்று, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தியாகராஜ நகர் ரயில்வே கேட் நெல்லை – திருச்செந்தூர் ரயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு 14 முறை மூடி திறக்கப்படும் இந்த ரயில்வே கேட்டினால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். நாடாளுமன்ற தோ்தலுக்கு முன் இப் பாலத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்த நிலையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதை அடுத்து இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.