நாங்குநேரியில் காரில் கொண்டு வந்த ரூ1.27 கோடி பணம் பறிமுதல்- வருமான வரித்துறை விசாரணை.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காரில் கொண்டு வந்த 1.27 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் நாங்குநேரி சுங்க சாவடியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது அதே போல் அதனைத் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் 27 லட்ச ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து திருநெல்வேலி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மாவு மில்லைச் சேர்ந்த ஊழியர் ஸ்டீபன் கோதுமை வாங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றதாகவும் மற்றொரு காரில் வந்தவர் தேனியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது மகன் வேல்குமார் ஆகியோர் கடைகளில் பூண்டு மொத்த வியாபாரம் தொடர்பாக பணம் வசூலித்து கொண்டு நாகர்கோவிலில் இருந்து தேனி நோக்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த கார்களை பறிமுதல் செய்த வருமானவரி துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நாங்குநேரி சுஙகச் சாவடியில் ரூ1.27 கோடி பணம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.